Saturday, July 11, 2015

மனைவி என்பவள்!

மாற்றுத் தாய் அவள்
மனைவி என்பவள்!
ஏற்றி எமை நெஞ்சில்
போற்றி வைப்பவள்!

வம்சம் வாங்கி
வடித்துக் கொடுப்பவள்!
அம்சமாயதை
செதுக்கித் தருபவள்!

மூத்த குழந்தையாய்
தத்தை எடுத்தெனை
கத்தை கத்தயாய்
முத்தம் பொழிபவள் !

உணர்வை உள்ளுக்குள்
இறங்கிப் பார்த்தவள்
உணர்ந்து தேவையை
சிறந்து செய்பவள்!

ஓய்ந்து அவளை
பார்க்க ஆசை தான்!
சாய்த்து மடியில்
தூங்க ஆசை தான் !

சாய்ந்து அவள்
தூங்கும் அழகிலும்
ஓயும் வீட்டின்
அமைதி கொல்லுமே!

தாய்க்கு மட்டுமா நம்
தீராக் கடன்!?
வாய்த்த மனைவிக்கும் நாம்
ஆறாக் கடன் !

-தமிழினியன் பிரபாகரன்-

Sunday, June 28, 2015

நமது நிஜம்!?

நிஜங்களின்
முகங்களை
நிஜமாய்
யார் காட்டியது?

பொய்களைப்
போர்த்தியே
மெய்களை மூடித்
திரிகிறோம்!

செய்வதொன்றாக
சொல்வது
வேறாக !

நீயென்ன ?
நானுமோர்
அரசியல்வாதி
தான்!

நாலு பக்க
சுவருக்குள்
நூறு வீத
மறைவுக்குள்

நாம் செய்வதும்
நமக்குள் நாம்
சொல்வதும் தான்
நமது நிஜம் !

பொய் களைந்து
துகிலுரித்து
நம் நிர்வாண
நிஜங்களை
காட்டுகின்ற
வீதத்தில் தான்
நாம்
நல்லவராய்
கெட்டவராய்
சமூகத்தில்
வாழ்கின்றோம் !

நிஜம் தானே
நான்
சொல்வது!?


-தமிழினியன் பிரபாகரன் -

Saturday, June 27, 2015

ஆசு அறியும் ஆசிரியனா நீ?



ஆசு அறியும்
ஆசிரியனா நீ?
வீசு உன்
வாளை!
பேசட்டும் உன்
பேனை !

மோசமாக
நாசமாக்கு
அறியாமையை !

காட்டமாக
போட்டுத் தாக்கு
முயலாமையை !

சாமான்யனா நீ?
அகிலத்தின்
அச்சாணி
செய்யும்
கொல்லன்
அல்லவா நீ?

குறை!
உன்னைக்   
குறை சொல்லி
சுட்டும்
விரல்களை !

கூட்டு
ஏற்றம் சொல்லி
உன்னைக்
காட்டும்
விரல்களை !

முடிந்தவனை
விட்டு விடு !
முடியாதவனை
மட்டும் எடு!

முடிந்தவனுக்கு
வழி சொல்!
முடியாதவனுடன்
வழி செல்!

உன்
முயலாமைக்கு
முடியாதவனை
முண்டு
கொடுக்காதே!


முடிந்தவன்
முதுகிலேறி நீ
விருதுக்கு
பெயர் கொடுக்காதே!

முடியாதவனை
முன்கொணர்ந்து
ஆத்மா திருப்தியை
முகர்ந்து பார்!

விருதுகளும்
பாராட்டும்
வெறும்
காகிதமாய்
போகுமுனக்கு !

அகராதியில்
ஆசிரியனுக்கு
அர்த்தமாவாய் !

-தமிழினியன் பிரபாகரன் -



Tuesday, June 23, 2015

குனிவு இன்றி நிமிர!





பண்போடு பணிவெடுத்து
அறிவோடு அடக்கமுற்று
தன்னிலை தாழ்த்துவோரை
மேன்னிலை தேடி வரும்!

ஆணவம் தலைக்கெடுத்து
ஞானச் செருக்கிலெவர்
வானம் தொட் டெகிறினும்
ஊனமுற் றுள்ளமுழல்வர் !

மமதை மதமெடுத்து
மண்ணில் மற்றவரை
மதியாதொழுகும் பாங்கால்
மிதியுற்றழிவார் அவர்!

உயர வளரும் மூங்கில்
தாழ்வளைந்தன்னைத் தாழ்த்தி
உயர்ந்த புல்லாய் உலகில்
நிமிர்ந்து நிற்றல் போல

உயர்வு உன்னில் உயர
பணிவு தன்னில் மூழ்கி
உயர்வாய் உலகத்துள்ளம்
குனிவு இன்றி நிமிர!

-தமிழினியன் பிரபாகரன்-

Saturday, June 20, 2015

நிர்வாணம் கொள்!

நிர்வாணம் கொள்!

எதிர்பார்ப்பென்னும்
எடைகொண்ட சேலை
களைந்துன் மனதில்
நிர்வாணம் கொள்!


உறவென்னும்
உறை பூண்டால்
உன்வரை மட்டும்தான்
உள்ளெதல்லாம் வேண்டப்படும்!


கொடுப்பதற்கு மட்டும் நீ
எடுப்பதற்கு உரித்தில்லை!
எடுப்பதற்கும் நினைத்தாலோ
கடுப்பான முரண் தொடுவாய்!


எட்டாத முந்திரியாய்
எதிர்பார்ப்பை விட்டகலு
கட்டாயம் சலனமின்றி
பதிந்தெளியுமுன் மனது


உறவுகளின் உன்னதமே
உணர்வுகளின் பகிர்வதில்தான்
உண்மையிது உணராத
உறவிலென்ன வேண்டுவது!


முரண்பாடு முற்றிப்போர்
திரண்டெழும் போதெல்லாம்
வரண்ட நம் எதிர்பார்ப்பை
சரணடைந்து விட்டுத்தான்


உறவோடொன்றிணைய
தொடர்ந்ததை கொண்டு செல்ல
வெண்கொடி பறக்க விட்டு
பண்பட்டு அடங்குகிறோம்!


நிர்வாணம் கொண்டு மனம்
துடைத்தெறிந்த எதிர்பார்ப்பில்
துளிர்க்கட்டும் நிம்மதி!
வீனெதற்கு அவமானம்!?


-தமிழினியன் பிரபாகரன்-

Friday, June 12, 2015

கோபம் கொல்வாய்!

கொத்திக் குதறியுன்
குணத்தைக்
கொன்று

கதறக் கதறவுன்
கண்ணியம்
சிதைத்து

உதற முடியாக்
கறையுன்னில்
தந்து

சிதறடித்துக்
கலைத்துன்
நிம்மதி

உன்னைச் சீண்டிய
குற்றம்
மறைத்து

உன்னை
மட்டுமே சுட்டிக்
காட்டி

குற்றவாளியாய்க்
கூண்டில்
ஏற்றும்

கூவிச்
சொல்லியும்
கேட்பாரிலருன்

நியாயம்
செத்து நீ
ஊமையாவாய்!

ஆதலால் நீ
கோபம்
கொல்வாய்!

-தமிழினியன் பிரபாகரன்-

Monday, June 1, 2015

அம்பலம் ஏறும் அம்மணம்




பகிர்ந்து வாழ
சொல்லித் தந்தது
முகநூல் !

பகிர்ந்து வாழக்
கற்றுக் கொண்டான்
மனிதன்!

அடுத்தவன்
அவலத்தை
அசிங்கத்தை
அம்மணத்தை!

கைபேசி தூக்கி
காட்சிகள்
கைது செய்து
கணப்பொழுதில்
பதிவேற்றி
விருப்புகளையும்
பகிர்வுகளையும்  
கணக்கிட்டு
தன் பிரதாபம்
மெச்சிக் கொள்கையில் !

மறந்து
விடுகிறான்
மனிதம் தொலைத்த
தன்
அம்மணத்தை
அம்பலம்
ஏற்றிக் கொண்ட
அசிங்கத்தை!

-தமிழினியன்-