Thursday, January 22, 2026

 மரணம் யாருக்கும் 

பொதுவானது!

வரும் தருணம்

எதுவென்று

தெரியாதது!

மறு கணம் கூட

இங்கு உறுதி

இல்லாதது!

வயதென்று 

வரம்பென்று

பார்க்காதது!

அரசன் 

ஆண்டியெனத்

பிரிக்காதது!

ஓடி ஒழிந்தாலும்

விடாதது!

பின்னெதற்கிந்த

ஆணவ ஆட்டம்!?

ஆசைகள் பின்னோட்டம்!?

இருப்பதைப் பகிர்ந்து

சக உயிரினை மதித்து

சகஜமாய் வாழ எது இங்கே தடுக்கிறது?

சிரஞ்சீவிகள் இருந்தால்

சொல்லுங்களேன்!

Sunday, January 11, 2026

இது புதுசு!நீ புதுசு!


எல்லோரும் போலவே நீயிருந்தால் 

எல்லோரில் யாராய் நீயிருப்பாய்?

வித்தியாசப்படு! 


ஒத்திவைத்தவுன் எத்தனத்தில் 

சொத்தியாகுமுன்னிலக்கு! 

இன்றே செய்! 


முயலாமல் முடியாது 

முன்சென்று நீ வெல்ல! 

முயற்சி செய்!


தோல்விக்குத் துவண்டால் நீ 

கேள்வியின்றித் தொடரும் தோல்வி! 

எழுந்துநில் !


கட்டம் கட்டி முட்டி நின்றால் 

ஒட்டு முறிந்து விலகுமுறவு!

விட்டுக்கொடு! 


மறக்காத் துரோகம் உனையென்றும் 

உள்ளிருந்துருக்கும்! 

மறந்துவிடு! 


மன்னித்தல் உன்னை 

மனிதரில் மாண்புறுத்தும் !

மன்னித்து விடு!


செல்லும் செல்வத்தோடு 

செல்லாதிருக்கவுன் புகழ் !

தானம் செய்!


-தமிழினியன் பிரபாகரன்-