Friday, April 17, 2026

 மறுதழி நெகிழி


நெகிழியின் பிறப்பால்

நெறிபிறழ்ந்தது இயற்கை


அவனியினழகை கற்பழித்து

குப்பைகளாயாங்கே குன்றுகள்

பிரசவிக்க


மண்ணோடுமண்ணாகும்

படைப்பிலக்கணம் மீற

விண்ணேகும் மேடாய்

நாற்றங்களின் பீடங்கள்.


ஏற்றங்கொண்டறிவு

ஏகி மேலோங்கி மனிதன்

ஆகியவழியெலெல்லாம்

நெகிழி புகுத்தி

அகிலமடியையின்று

அவலமாக்கி விட்டான்.


ஆழி குளமாறு

எழிலேரிக்கரையெல்லாம்

வீதிவழியெங்கும்

மீதியின்றியிடம்-கண்

மோதிக்ககிடப்பதெல்லாம்

வேதியல் அழிவற்ற

நெகிழிக்கழிவன்றோ.


நூறாண்டு முன்னே

யாரார் கண்டார்

பார் மீதிலிங்கே

போராக குவிந்த

பேரிமயக்குப்பை?


நாமறிந்த வகையில்

கழிவெல்லாமன்று

கழிவின்றி மண்ணில்

மக்கியழிந்து

மண்ணோடுமண்ணாகி

பார்மடியில் உயிராய்

மீண்டெழக் கண்டோம்


யார்கொண்ட சாபம்

கழிவெல்லாமின்று

அழிவின்றி நின்று

பலியாக மீண்டும்

உயிர் கொல்லக்

கண்டோம்


மறுதலித்து நெகிழி

மாற்றீடு கண்டு

மரபுவழி மீண்டு

மனிதர் நாம்

திரும்பி

இயற்கை நேயம்

காத்து இயைந்து வாழ

விளைதல் காலமிடும்

ஆணை


மீறி மேலும் முன்னே

ஏறிநாமும்

சென்றால்

இயற்கையெம்மை ஏறி

வதம் கொள்ளும்

திண்ணம்


-தமிழினியன் பிரபாகரன்-

Monday, April 13, 2026

பேரண்டமா

 பேரண்டமா!?

பிரபஞ்சமா!?

எது பெரியது!?

தெரியவில்லை!

எதுவானாலும்

நான் அதில்

கடல் மணல் துகளின்

கோடியிலொரு

பங்கின்

பலகோடியிலும் 

ஒரு பகுதி தானென

நானறிவேன்!

ஒலியல்ல!

ஒளியுமல்ல!

வேகப்போட்டியில்

இதை விஞ்ச 

இன்னுமொன்றை

யாராலும் சொல்ல முடியாது!

அந்த மனதிலேறி

இமைப்பொழுதில்

பல்லாயிரம் லட்சம் கோடி

ஒளிவருடம் தாண்டிச் சென்று

ஒரு புள்ளியில் நின்று

சுற்றிக் கொஞ்சம் !

பார்த்தேன்!

சிரிக்காதீர்கள்

மனக்கண்ணால்

தான்!

சிதைந்து போனதென்

சித்தாந்தங்கள் பல!

ஜாதி கரைந்தது!

இனம் தொலைந்தது!

மொழி மறந்தது!

நானென்ற நானே

எனக்குள் எதுவுமில்லா

வெறும் ஒன்றாய்ப் போனேன்!

இறைவனென்று

சொல்லி 

இங்கு மனிதர்கள் நாங்கள்

வகுத்துச்சொன்ன

பல்லாயிரம்

பைத்தியக்கார

போதனைகளில்

ஒன்றைத் தவிர

மற்றெல்லாம்

அவனவன் வசதிக்கும்

வாய்ப்பிற்கும்

ஏற்பச் சொன்ன

பொய்களென

புரிந்து போனது!

இறைவன்

உருவமில்லாதவன்!

எங்கும் நிறைந்தவன்!

என்பதைத் தவிர

அனைத்துமே 

வெறும் அபத்தங்கள்!

கிரகங்கள்,நட்சத்திரங்கள்,பால்வெளிகள்,அண்டங்கள்,பேரண்டங்கள்,பிரபஞ்சங்களென அனைத்துமங்கே ஏதோவொரு அறிய முடியா விதிக்கமைய ஆங்காங்கே ஒரு ஒழுங்குமுறையில் அவையவை அவற்றுக்குரிய இடத்தில், ஒழுக்கில் இயங்கி நகர்ந்து கொண்டிருக்க அவையனைத்தையுமே

கட்டிப்போட்டிருக்கும்

அந்த மா,மா,மா,மாபெரும்

கண்ணுக்குத் தெரியாத

சக்தியே!

இயற்கையொன்றே!

இங்கு இறைவனென்று புரிந்து போனது!

கனவு கலைந்து கண்விழித்தேன்

எனக்குள் மதம் கலைந்து

மனம்

தெளிந்திருந்தது!


-தமிழினியன் பிரபாகரன்-