Friday, June 19, 2026

 நிர்வாணம் கொள்!


எதிர்பார்ப்பென்னும்

எடைகொண்ட சேலை

களைந்துன் மனதில்

நிர்வாணம் கொள்!


உறவென்னும்

உறை பூண்டால்

உன்வரை மட்டும்தான்

உள்ளெதல்லாம் வேண்டப்படும்!


கொடுப்பதற்கு மட்டும் நீ

எடுப்பதற்கு உரித்தில்லை!

எடுப்பதற்கும் நினைத்தாலோ

கடுப்பான முரண் தொடுவாய்!


எட்டாத முந்திரியாய்

எதிர்பார்ப்பை விட்டகலு

கட்டாயம் சலனமின்றி

பதிந்தெளியுமுன் மனது


உறவுகளின் உன்னதமே

உணர்வுகளின் பகிர்வதில்தான்

உண்மையிது உணராத

உறவிலென்ன வேண்டுவது!


முரண்பாடு முற்றிப்போர்

திரண்டெழும் போதெல்லாம்

வரண்ட நம் எதிர்பார்ப்பை

சரணடைந்து விட்டுத்தான்


உறவோடொன்றிணைய

தொடர்ந்ததை கொண்டு செல்ல

வெண்கொடி பறக்க விட்டு

பண்பட்டு அடங்குகிறோம்!


நிர்வாணம் கொண்டு மனம்

துடைத்தெறிந்த எதிர்பார்ப்பில்

துளிர்க்கட்டும் நிம்மதி!

வீனெதற்கு அவமானம்!?


-தமிழினியன் பிரபாகரன்-

Friday, June 12, 2026

 இடைத்தரகன் நான்!!

இறைவனுக்கும் 

இரந்து நிற்கும் மனிதனுக்கும் 

இடையில் நானொரு 

இடைத்தரகன்!

இறைவனாய்

இரப்போருக்கு 

வரமாய் வாரிவழங்கும்

மனமுள்ளோரிடம்

யாசகனாய்

இருகரமேந்தி நான்

இரந்து வாங்கும் உதவிகளை

தரகேதும் கழித்திடாமல்

இரப்போரின் கரம் சேர்க்கும்

இடைத்தரகன் நான்!

சில நேரம் 

இருக்கும் போது 

நானும் வரமளிக்கும்

இறைவனாவதுண்டு!

உணர்ந்து சொல்கிறேன்!

இருப்பதைக் கொஞ்சம்

பகிர்ந்து கொடுத்துப் பாருங்கள்

இறைவனைத்தேடி

அவனில்லமோட தேவை வராது!

இறைவனாய் நீங்களே

இறுமாந்து கொள்ளுமோர்

ஆத்மதிருப்திகாண்பீர்!

இறைவனின் ஆசியும் தேடி

உங்களை

வந்து சேரும்.!

இருந்தால் தான் 

இரப்போருக்கு 

ஈயலாமென்றில்லை!

இருப்போரிடம்

இருகரமேந்தி

இரந்து பெற்றும்

ஈயலாம் தப்பில்லை!

வெட்கமும் தன்மானமும்

துறந்தவொரு

துறவு நிலை கொண்டால்!

மறந்தும்

அதில் 

தரகேதும் கொண்டு 

உங்கள்

தரம் தாழ்ந்திடாமல்

இடைத்தரகனாகியும்

தேடலாம்

புண்ணியம்!

தாழ்வின்றி

நெஞ்சுயுர்த்தி

இறுமாந்து

சொல்வேன்

இல்லையென்று

கைவிரித்து

இரப்போரை

ஏமாற்றியதில்லை!

இருப்போரிடம்  கையைந்தி

இரப்போரின்

பசியாற்றும்

இடைத்தரகன்

நான்!


 -தமிழினியன் பிரபாகரன்-

Thursday, June 4, 2026

 ஆச்சரிய ஆசிரியம்!


சுயம்புவாய் 

சுயம் கற்று

சுயமாய்க் கற்று

அமீபாவான்று ஆறறிவு பெற்று

அவனியிலென்றோ

எழுந்த போது

ஆசிரியமங்கே ஆச்சரியமாயொரு தொண்டாய்த்தானே

தொடங்கியிருக்கும்.!?


தெரிந்ததைப் பகிர்ந்து

அறிந்ததைச் சொல்லி அடுத்தவரறிவும்

அடுத்த படிக்கெடுத்து

அவனியை மெல்ல

அறிவுக்கிரகமாக்கிய

ஆசிரியமன்று

அறியாமல் வந்த முதல் தொழில் தானே!

சுயநலமன்று

சுயோமோச்சியிருந்தால்

நானும் கூட இன்னும்

ஜடமொன்றாய் எங்கோ பரிணாமமற்ற

ஓரறிவுயிர் தானே !


-தமிழினியன் பிரபாகரன்-