Friday, June 12, 2026

 இடைத்தரகன் நான்!!

இறைவனுக்கும் 

இரந்து நிற்கும் மனிதனுக்கும் 

இடையில் நானொரு 

இடைத்தரகன்!

இறைவனாய்

இரப்போருக்கு 

வரமாய் வாரிவழங்கும்

மனமுள்ளோரிடம்

யாசகனாய்

இருகரமேந்தி நான்

இரந்து வாங்கும் உதவிகளை

தரகேதும் கழித்திடாமல்

இரப்போரின் கரம் சேர்க்கும்

இடைத்தரகன் நான்!

சில நேரம் 

இருக்கும் போது 

நானும் வரமளிக்கும்

இறைவனாவதுண்டு!

உணர்ந்து சொல்கிறேன்!

இருப்பதைக் கொஞ்சம்

பகிர்ந்து கொடுத்துப் பாருங்கள்

இறைவனைத்தேடி

அவனில்லமோட தேவை வராது!

இறைவனாய் நீங்களே

இறுமாந்து கொள்ளுமோர்

ஆத்மதிருப்திகாண்பீர்!

இறைவனின் ஆசியும் தேடி

உங்களை

வந்து சேரும்.!

இருந்தால் தான் 

இரப்போருக்கு 

ஈயலாமென்றில்லை!

இருப்போரிடம்

இருகரமேந்தி

இரந்து பெற்றும்

ஈயலாம் தப்பில்லை!

வெட்கமும் தன்மானமும்

துறந்தவொரு

துறவு நிலை கொண்டால்!

மறந்தும்

அதில் 

தரகேதும் கொண்டு 

உங்கள்

தரம் தாழ்ந்திடாமல்

இடைத்தரகனாகியும்

தேடலாம்

புண்ணியம்!

தாழ்வின்றி

நெஞ்சுயுர்த்தி

இறுமாந்து

சொல்வேன்

இல்லையென்று

கைவிரித்து

இரப்போரை

ஏமாற்றியதில்லை!

இருப்போரிடம்  கையைந்தி

இரப்போரின்

பசியாற்றும்

இடைத்தரகன்

நான்!


 -தமிழினியன் பிரபாகரன்-

No comments:

Post a Comment