Sunday, October 4, 2026

 ஆசான்களே நாம்

ஆசுவாசப் படுத்திக் கொள்வோம்!

கொஞ்சம்!


ஒரு வகையில் நாம்

துரதிர்ஷ்ட சாலிகள்!

ஆசான்கள் உண்மையில் தெய்வங்களாகப் போற்றப் பட்ட காலத்தில் நாம் ஆசான்களாகவில்லையே!


அன்று பெற்றோர்கள் எம்மைப் பெற்று பிண்டங்களாக அவர்களிடம் கொடுத்து விட்டு

குயவனிடம் சேர்ந்த களிமண் போல் நல்ல கலயமாக வனைந்து‌ சுட்டு வெளியே வரும் வரை வாளாதிருந்தனர்.


ஆனால் இன்றோ !?

சற்று நெளிவெடுக்கத் தட்டினாலே இல்லையில்லை சற்றுச் சத்தமாகச் சொன்னாலே!

உளவியலாம் உபத்திரவமாம்

சிறுவர்தம் உரிமையாமென

ஊரிலுள்ள சட்டமெல்லாம் சொல்லி நம் கையையும் வாயையும் கட்டி

கத்தரித் தோட்டத்து‌வெருளியாக‌

நிற்க மட்டும் சொல்லும் சமூகத்தில்


ஆசான்களானது நம் சாபமே!


பள்ளிக்குப் பிள்ளை வராது.

ஆனால் படிப்பு

மட்டும் பிள்ளைக்கு 

வந்து விட வேண்டும்!


பதின்மத்திலேயே 

ஏன் சில நேரம் அதற்கும் முன்பே பருவம் வருகிறதோ இல்லையோ

காதல் மட்டும் வந்து விடும்.

கண்டு கொள்ளக் கூடாது.


சமூகத்தின் சாக்கடைக்குள் எல்லாம் இறங்கி ஏறி நீந்தி வரும்‌பிள்ளை

ஆனால்

கண்டால் கண்டித்தால்

தன் குஞ்சு பொன் குஞ்சு

நாம் சொல்வதெல்லாம் அவர்களுக்கு நஞ்சு!


அவர்கள் பிள்ளைகள்

பருவத்திற்கு முன் முதிர்ந்து

கெட்டுப் பட்டுப் போன பின்பே பாழாய்ப் போன அவர்களுக்கு பட்டறிவு வருகிறது.


வந்தென்ன பயன்

கருகியது கருகியது தானே!?


அந்த நேரம் எங்களுக்கு வருமேயொரு ஆற்றாமை

வைத்தியர்கள்  ஐந்து நிமிடத்திற்கு முன் வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாமென்று

சொல்வது  போல்!


சொன்னதைக் கேட்டிருந்தால்

இந்நிலை இன்றில்லையே என்று

அது ஒரு கொடும் வலி

ஒவ்வொரு உண்மை ஆசானுக்கும்.


கைகட்டி நீந்தச் சொல்லும் 

கால்  கட்டி ஆடச்சொல்லும்

வாய்பொத்திப் பாடச்சொல்லும்

கண் மூடி வரையச் சொல்லும்

புத்தி கெட்ட சமூகத்தில் இவையெல்லாம் முடியாதெனப் பகராமல்

முடிந்த வழிதேடி

முடியுமென்றெண்ணி முயலும் ஆசான்களே!


சற்று‌ஒய்வெடுங்கள்.

எங்களுக்கும்

ஆசுவாசம் தேவையில்லையா!?


ஆனாலும் இறுமாந்து கொள்வோம்!

என்னதான் எதிர்மறை கொண்டடித்தாலும்


விடாமல் கொடாமல்

விடாக்கண்டன்

விக்கிரமாதித்தனாய்

முட்டி மோதி முயன்று

அங்கொன்றிங்காய்

உண்மையில்‌ பசித்து வரும் யாசகனாய் கல்வி தேடும் பிள்ளைகளை கை விடாமல்‌ கரையேற்றும் பரிசல் காரராய்

பணியாற்றுகிறோமே அதையிட்டு.!


ஆசுவாசம் கொள்வோம்!

ஆனால்‌ அயர்ந்தோய்ந்து விடாமல்

இன்னும் அயராதுழைப்போம் வாரீர்.


அடுத்து வரும்‌ தலைமுறை‌ மறந்தாலுமெம்மை

வாழ வழியின்றி

இறந்து வீழாதிருக்க.

வழி காட்டித்திசைகாட்டி

தடமொன்று‌போட்டு வைப்போம்

தவழ்ந்தேனும் போகட்டுமே!


ஏனென்றால்

நாம் செய்வது தொழிலல்ல

தொண்டல்லவா!?

உண்மையான

ஆசான்களுக்கு!

-தமிழினியன் பிரபாகரன்-

No comments:

Post a Comment