Monday, May 18, 2015

இன்றே கொல் !



எனக்குள் ஏனிந்த கேள்விகள் நூறு
எதற்கு என்னுளிவ்வையங்கள் நூறு?
எங்கே இறைவன் என்பதின் தேடல்?
எதில் போய் முடியுமென் இறைவனின் சாடல் ?

அவனியென்னவனுக்கு விளையாட்டுத் திடலா?-இது
அன்பே உரு வானவன் செயலா?
அப்பாவிகள் கோடியைக் கொன்றா
கொடும்பாவிகள் நூறினைக் கேட்பான்?

நின்று கொல்லும் தெய்வம் என்றால்
என்று வரை ஒத்திவைப்பு ?
அன்றே கொன்று புதைத்து விட்டால்
நன்றேயவனி வாழ்ந்திடாதா?

ஒத்திவைத்து ஒத்துழைத்து பாவம் தனில்
ஒத்திசைந்து சாகும்  மட்டும் பாவிகளாய்
எத்திசையும் தீட்டுப் பட வாழ்ந்தழிக்க
மத்தி செய்யும் மாண்பு தா னென்ன?

அன்றே கொன்றவனியினை
அன்றன்றே சுத்தி செய்து அப்பாவிகள்
நன்றே வாழும் அழகான பூமி தர
இன்றே கொல் பாவிகளை !

-தமிழினியன்-



Sunday, May 17, 2015

பரமனே என் பராபரமே!

நிர்ச்சலன
மோனத்தில்
நிசப்தத்தின்
சப்தம் கேட்டேன் !

பிரபஞ்ச
பூதமென்னும்
பிரமாண்ட
ரூபம் கண்டேன்!

எல்லை இல்லா
அகண்ட வெளியில்
கோடியிலோர்
அணுத்துகள்
நான்!

இது தான்
இத்தனை தான்
நான்
என்றுணர்ந்த
போது
என்னுள்
நான்
தொலைந்து போக !

எதுவுமில்லா
வெற்றிடத்தில்
எல்லாமாய்
உன்னைக் கண்டேன்!

பரமனே!
என் பராபரமே!!

-தமிழினியன்-

சற்று ஏதாவது செய்!

உதிரும்
நிமிடத் துளிகள்
உனைக் கடந்து
போகும் !

உலகிலோர்
உயர்திணையாய்
உதித்து நீ
என்ன செய்தாய்?

ஏதோ பிறந்தோம்
வாழ்ந்தோம்
செத்தோம்
என்று போக
நீ என்னவோர்
அஹ்ரினைப் பூச்சியா?


உன்னுயிர்
உதிர்ந்தழிந்து
உலர்ந்து
போகுமுன்
உலகம்
உள்ள வரை
உன்நாமம்
உயிர் வாழ
உயர்திணையாய்
உதித்து நீ
என்ன செய்தாய்?

எண்ணூறு கோடியில்
எப்படி உன்
பெயர் பதிப்பாய்?

புத்தன்
இயேசு
காந்தி
அன்னை தெரேசா
நெல்சன் மண்டேலா
ஏன்
ஹிட்லரும்
இடியமீனும் கூட
இன்னும்
பெயர் வாழ்கையில்

நீ யாராய்
பெயர் பதிப்பாய் ?

சுற்றும் பூமியோர்
முற்றுப் புள்ளியில்
வெடித்துச் சிதறும் வரை
துடித்துக் கொண்டிருக்க
உன் பெயர்
சற்று ஏதாவது செய்!

-தமிழினியன்-

முரண்பாடுகளின் மொத்த உருவமாய்!

கல்லுக்குள் தேரைக்கும்
அளந்தடிசில்
வைத்தவன் !

அரிசியில் உரியவன்
பெயர் -அறிந்து
குறித்தவன்!

அரியே உன்னிடம்
அறியவோர்
கேள்வி?

பகிர்வில்
உனக்கேன் பாரினில்
பாரபட்சம்?

சோமாலியா தேசத்து
சொந்தங்களை
மறந்ததேன்?

பட்டினியும் பஞ்சமும்
பத்திரம் போட்ட
உரிமையா ?

பஞ்சமும் தரித்திரமும்
வஞ்சம் தீர்த்து
துரத்துவதேன்?

மில்லியனில்  ட்ரில்லியனில்
ஒரு பத்துப் பேர்
உறங்குகையில்

ஒரு மில்லி
நீரின்றி மில்லியன்
பேர் வாடுவதேன்?

ஆத்திகனா நாத்திகனா?
எனக்கே
என்னைப் புரியவில்லை !

எனக்கெல்லாம்
தந்தவன் நீ
என்பதனால்

துதி பாடி
துதிக்க உன்னை
என்னால் முடியவில்லை!

எல்லாருக்கெல்லாம்
தந்திருந்தால்
நீ!

எத்தனை அழகாய்
இருந்திருக்கும்
பூமி?

இறைவா நீ இல்லை
என்பதில் உடன்பாடில்லை
எனக்கு

இருக்கிறாய் என்பதற்கு
சமன்பாடுமில்லை
எனக்கு !

முரண்பாடுகளின் மொத்த
உருவாய் தெரிகிறாய் நீ
எனக்கு?

-தமிழினியன்-

Friday, May 15, 2015

என்னவள் ஹைகூவுகிறாள்!

கருஞ்சாயம் கரைத்து
நிலம் பாயும் நீர்வீழ்ச்சி
உன் கூந்தல்!

கயல் மீன்கள் கரை வந்து
சாயல் பார்க்கும்
உன் கண்கள்!

மூன்றாம் பிறை முன் வந்து
மண்டியிட்டுக் கேட்கும்
உன் நெற்றி!

கடலைக்கூடும் கதிரவனால்
நாணுகின்ற கீழ்வானம்
உன் கன்னம்!


அன்னம் பின் தொடர்ந்து
அடி வைத்துப் பழகும்
உன் நடை!

முல்லைக் கொடி வளைந்து
தன் நளினம் பார்க்கும்
உன் இடை!


-தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்

சூரியனா உன் விழிகள்!

எதில் விழுந்தேன்!?
ஏன் விழுந்தேன்!?
புரியவில்லை!

என் வழியால்
போனவனை
உன் விழியா
வீழ்த்தியது!?

குந்திக்கு
சூல் கொடுத்த
சூரியனா
உன் விழிகள்!?

கற்பிழந்து
போன் என்
உள்ளம்
காதல் கருவினைச்
சுமக்கிறதே!

கருக்கலைக்க
நான்
பாவியல்ல
சம்மதத்
தாலி தந்து
என் காதல்
கருவிற்கோர்
அங்கீகாரம் தா!

கை கோர்த்து
இருவரும்
சேர்ந்தே
பிரசவிப்போம்!

இல்லை என்
கருவோடு
நான்
கல்லறைக்குள்
மூடிக் கொள்கிறேன்!

சமூகச் சாபத்துக்கு
சத்தியமாய்
நான்
ஆளாக மாட்டேன்!

-தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்

முகமூடித் தலைமைகள் !

கடல் கடவுளாகும்!
நதிகள் மதங்களாகும்!
மேடைப் போதனையில்!!

ஆனால்!

நீறழித்து
சிலுவை மறந்து
தொப்பி கழட்டி
தனித்துவம்
தொலைக்க மட்டும்
தடை போடும்
முகமூடித் தலைமைகள்!

_தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்