Sunday, May 31, 2015

ஒரு மனிதனைத் தேடி !



 விடிந்து முடியும்
பொழுதொவ்வொன்றும்
முன்னகர்த்துமுன்
முடிவை நோக்கி
ஓரடி!

ஆனால்
ஏதோ என்றும்
நின்று நிலைத்து
வாழும் நினைப்பில்
நீ!

விஞ்ஞான மமதையில்
மெய்ஞானம் துழைத்து
கடவுளைத் தோண்டி
நீ துகள் தேடினாலும்
ரத்துச் செய்ய
முடியாத சாசனம்
உன் மரணம்!

அதை மறந்து
தொலைத்ததால்
இங்கு
மனிதம் தொலைந்தது !

மழை வறண்ட
பூமியாய்
பாளம் வெடித்து
ஏங்குது மனசு
எனக்குத் துணையாய்
ஒரு மனிதனைத்
தேடி !

மனிதம் நிறைந்த
ஒரு மனிதனைத் தேடி !

-தமிழினியன்-

Thursday, May 28, 2015

மத மமதையை விட்டொழி!



இறைவன் ஒருவன் தான்
இதிலெனக்கு
ஐயமில்லை !
இருந்தும் ஏனோ
எனக்கு 
ஐயரவு!
இருக்கும் ஒருவனை
பல்லுருவமாக்கிய
மாக்களில்

தன்  வசதிக்கவன்
வார்த்தைகளை
வளைத்து
விதி செய்த
மக்களில்
இருந்தும் ஏனோ
எனக்கு 
ஐயரவு!


உருவத்தை!
அருவத்தை!
கல்லை !
மரத்தை!
பெயர் மாற்றி
உரு மாற்றி
முறை மாற்றி
எவரெதை
வணங்கினும்
அவனொருவனுக்கே
வந்தனையெல்லாம்
எனும்போது
வீண்
நிந்தனை எதற்கு
அடுத்தவன் முறைக்கு


மதம் தன்னில்
மதம் கொண்டு
அதம் செய்து
வதம் செய்து 
அடுத்தவன்
மதமழித்து
மமதை
கொண்டாடி
மண்ணுக்குப்
போனபின் நீ  
மதமல்ல
மண் தான் 
உன்னடையாளம்

மூடா!

மறுபடி பிறந்து
நீயுன்னை
மாற்றிக் கொள்ள
முடியாது!

எவனெவனுக்கு
எது சரியோ
அவனவனை
அது படி விடு

உனக்கு நீ சரி
எனக்கு நான் சரி
இதில் யார் சரி
தீர்மானிக்க
நாம் யார்!?

மண்ணுக்குள்  
மொழிக்குள்  
கலாசாரத்துக்குள்
அவனவன்
தன் வசதிக்கு
கடவுளைத்தேடி
வாழட்டும் விடு !

அவன் முறை
பிழை
என்றால்
அதை அவன்
தேடும்
கடவுளே
பார்த்துக் கொள்ளட்டும்!

அவனையடக்கி
அழித்து
எண்ணிக்கையில்
தன்மதம்
தொடர்வோர்
கூட்ட எப்போதுன்
கடவுள்
கட்டளை
இட்டான்!

மூடா!


எண்ணிக்கையில்
இல்லை
உன் இறைவனின்
மாண்பு !

வாழும்
மனிதத்துவத்தில்
உள்ளது
இறையவன்
பேரொளி!

இறைவனென் 
நாவில் நின்று
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மத 
மமதையை
விட்டொழி !

-தமிழினியன்-

Monday, May 18, 2015

நானென் சிதையில்!



நாலிரண்டு கரங்களில் என் பயணம் முடியுங்கால்
நாலு பேர் கண்கலங்கி நாற்புறம் நின்றெனக்கு
வழுங்கால் செய்ததாய் நான்
நாலு நற்குணம் பகன்றால் போதும்!

தூற்றிஎன் சிந்தை துடைத்தெறியாமல் 
போற்றியென் புகழ் பொறித்திடவே
நாற்றிசை வாழ் மாந்தருள் நான்
நூற்றிலொருவனாய் நினைவில் நிற்க

வாழ்ந்தழியும் வரம் தா போதும்
ஓய்ந்த பின்னுமென் மூச்சடங்கி
சாய்ந்து மண்ணில் நான் மறைந்த போதும்

வாழும் வழிக்கோர் வரையா விதியாய்
வாழ்ந்து காட்டிய வழிவந்தோரின்
வரிசையில் நானும் சேர்ந்து நிற்க
வலிகள் தாங்கி வலிதாய் முயல்வேன்

இறந்து வாழும் வரம் தான் கேட்டேன்
மறந்தும்  வேண்டாம் மீண்டும் பிறக்க
சிறந்த மனிதன் இவன் தானுலகில்
பொறித்துப் புதைவேன் நானென் சிதையில் !

-தமிழினியன்-