Saturday, May 9, 2015

ஊனம்!



நிறைமாதக் கர்ப்பிணியாய் ஒரு பக்கம் சாய்ந்தபடியே வந்து நின்ற அந்த பேரூந்தில் இருந்து ஒரு ஆறு பேர் இறங்க அதன் இரு மடங்காய் ஒரு கூட்டம் முட்டி மோதி தன்னை உள் நுழைத்துக் கொள்ள முக்கியபடியே  ஒரு பெருமூச்சாய் உறுமிய படியே பேரூந்து தொடர்ந்தூரத் தொடங்கியது.உலகத்தின் ஒட்டுமொத்த வார்ப்புக்களும் தரங்களும் மனிதர்களாய் அதற்குள் அடுக்கப் பட்டிருந்தனர்.பிதுங்கிப் பிழியப்பட்ட வியர்வைகள் ஒட்டுமொத்த ஆறாகி ஜாதியொழிப்புக்கு கட்டியம் கூறியது .
அடைசல் ,வியர்வை,பசி,வயோதிபம் எல்லாம் கலந்த அந்த அம்மா நெரிசலில் நசுங்கிப் பிதுங்கி பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டிருந்ததை கண்ட இருக்கை வாசிகளுக்கு தூக்கம் வந்து கண்ணை சுழட்ட பாவம் தூங்கிப் போனார்கள்.
பள்ளிப் பையை மடியில் வைத்து அமர்ந்திருந்த அந்த சிறுவன் பையை அருகிலிருந்தவரிடம் கொடுத்து விட்டு எழுந்து அந்த அம்மாவை அழைத்து அவனிருக்கையில்  மிக சிரமப் பட்டு அமரவைத்து அவர் அருகில் இருக்கையை பிடித்தவாறு நின்று கொண்டான்.
அந்த அம்மா அவனைப் பார்த்த பார்வையில் நன்றி பொங்க சிறுவன் ஒரு சின்ன சிரிப்புடன் நின்றுகொண்டான்.
களைத்து தூங்கிய இருக்கை  வாசிகளுக்கு இப்போது முழிப்பு வந்து விட்டது !
யன்னலுக்கு வெளியே, பேரூந்துள்ளே என் தம் கண்களை மேய விட்டு தாங்கள் எவ்வளவு பாக்கிய சாலிகள் என சந்தோஷப் பட்டுக் கொண்டார்கள் !
அந்தப் பையன் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மணியடித்து தன் பையையும் வாங்கித் தோளில் மாட்டிய படியே வாசலை நோக்கி நீந்தினான் !
அவனது நீச்சலில் நெரிசல் இன்னும் அதிகரிக்க நிற்பவர்கள் அமர்ந்தவர்கள் மேல் சாய ஏதோ அசூசை தம் மேல் பட்டவர்களாக அவர்கள் புறுபுறுத்து நெளிய திடீரென்று சிறுவன் அலறினான் ‘’ஐயோ என் கால்! கால்!’’
நெரிசலில் யாரோ அவன் காலை மிதித்து விட்டார்கள் என்று இருகை வாசிகளில் ஒரு கனவானுக்கு கோபம் வந்து விட ‘’கொஞ்சம் ஒதுங்கி வழி விடுங்களேன் !பாவம் பையன் இறங்க’’என்ற கத்தினார் .
மீண்டும் சிறுவன் ‘’என் கால் என் கால்’’ என்று கத்த நடத்துனர் எல்லோரும் இறங்கி இடம் கொடுங்கள் என்று கூறி நிற்பவர்கள் சிலரை கீழே இறக்க
நெரிசல் குறைந்து இடைவெளி ஏற்பட அதுவரை நெரிசலில் நசுங்கி நின்று கொண்டிருந்த பையன் பிடிமானம் இன்றி பொத்தென கீழே விழுந்தான்.
பார்த்தவர்கள் பதற பையனின் ஒருகால் கழன்று நெரிசலில் மிதி பட்டு நசுங்கிக் கிடக்க பையன் ஒற்றைக் காலுடன் கம்பியொன்றைப் பிடித்தவாறு எழுந்து நின்றான்.
கழன்று நசுங்கிக் கிடந்த தன்  ஜெய்ப்பூர் காலினைப் பார்த்த சிறுவனின் கண்கள் குளமாக பொங்க  இருக்கையில் கண் திறந்து தூங்கிய சுகவாசிகளுக்கு தலை குனிந்தது !  
-தமிழினியன்-

No comments:

Post a Comment