Saturday, May 2, 2015

மரணத்தின் பின்னென் !

மரணத்தின் பின்னென் !

Post
நாலிரண்டு கரங்களில் என் பயணம் முடியுங்கால்
நாலு பேர் கண்கலங்கி நாற்புறம் நின்றெனக்கு 

வாழுங்கால் செய்ததாய் நான்
நாலு நற்குணம்  பகன்றால் போதும்!

தூற்றி என் சிந்தை துடைத்தெறியாமல்
போற்றியென் புகழ் பொறித்திடவே
நாற்றிசை வாழ் மாந்தருள் நான்
நூற்றிலொருவனாய் நினைவில் நிற்க

வாழ்ந்தழியும் வரம் தா போதும்
ஓய்ந்த பின்னுமென் மூச்சடங்கி
சாய்ந்து மண்ணில் நான் 
மறைந்த போதும்

வாழும் வழிக்கோர் வரையா விதியாய்
வாழ்ந்து காட்டிய வழிவந்தோரின்
வரிசையில் நானும் சேர்ந்து நிற்க
வலிகள் தாங்கி வலிதாய் முயல்வேன்

இறந்து வாழும் வரம் தான் கேட்டேன்
மறந்தும்  வேண்டாம் மீண்டும் பிறக்க
சிறந்த மனிதன் இவன் தானுலகில்
பொறித்துப் புதைவேன் நானென் சிதையில் !

-தமிழினியன்-

No comments:

Post a Comment