Saturday, May 2, 2015

அனுதினமும் இங்கே எங்கள் தினமே!

அனுதினமும் இங்கே எங்கள் தினமே!

Post 
சுழழும் பூமியின்
சில்லுகள் நாங்கள்
உழன்று நாம் சேற்றில்
சுழற்றுவோம் பூமியை

ஒருநாளில்லை
ஒரு நாழிகை போதும்
ஓய்ந்தால் நாங்கள்
ஓயுமெல்லாம் நிரந்தரமாக !

ஒரு நாள் தந்து
திருநாள் போல
வரும்நாள் எல்லாம்
வெறும் நாளாக்கி

ஏனிந்த கூத்து
மேதினி எங்கும்
மேதினம் என்பது
வெறும் வெத்து வேட்டு!

தெருக்கோடியில் கிடக்கும்
எங்களை விற்று
எத்தனை கோடிகள்
உங்கள் கணக்கில்?

இன்றொரு நாளில் எதை
வென்று தர நீங்கள்
ஒன்றாய்க் கூடி
மேடை போட்டீர்?


விளம்பர உலகில்
விற்பனைப் பண்டமாய்
மலிவு விலையில் விற்குமோர்
பண்டிகைக் காலமா மே தினம்?

ஒருபிடி சோற்றுக்கு
நூறடி உழுது
ஆறடி மண்ணில்
அழுகியே விழுகிறோம்

மானம் காக்க உங்கள்
பட்டாய் தந்து
கோவணம் கூட இன்றி
கோணியே நிற்கிறோம்

ஓடும் வாகன
உதிரிப் பாகங்கள் நாம்
காடும் கழனியும் கடக்க
அம்மணப் பாதங்களா ?

மாடாய் உழைத்து
ஓடாய் தேய்ந்தாலும்
பாடாய் படுத்தி
போடா என்பீரே

ஒன்றும் வேண்டாம்
விடுங்கள் எங்களை
எங்கள் தேவை
அறிந்தால் நீங்கள்

அனுதினமும் இங்கே
எங்கள் தினமே!
ஆண்டாண்டு காலம்
தொடராது மே தினம் !

-தமிழினியன்-



No comments:

Post a Comment