Sunday, May 17, 2015

முரண்பாடுகளின் மொத்த உருவமாய்!

கல்லுக்குள் தேரைக்கும்
அளந்தடிசில்
வைத்தவன் !

அரிசியில் உரியவன்
பெயர் -அறிந்து
குறித்தவன்!

அரியே உன்னிடம்
அறியவோர்
கேள்வி?

பகிர்வில்
உனக்கேன் பாரினில்
பாரபட்சம்?

சோமாலியா தேசத்து
சொந்தங்களை
மறந்ததேன்?

பட்டினியும் பஞ்சமும்
பத்திரம் போட்ட
உரிமையா ?

பஞ்சமும் தரித்திரமும்
வஞ்சம் தீர்த்து
துரத்துவதேன்?

மில்லியனில்  ட்ரில்லியனில்
ஒரு பத்துப் பேர்
உறங்குகையில்

ஒரு மில்லி
நீரின்றி மில்லியன்
பேர் வாடுவதேன்?

ஆத்திகனா நாத்திகனா?
எனக்கே
என்னைப் புரியவில்லை !

எனக்கெல்லாம்
தந்தவன் நீ
என்பதனால்

துதி பாடி
துதிக்க உன்னை
என்னால் முடியவில்லை!

எல்லாருக்கெல்லாம்
தந்திருந்தால்
நீ!

எத்தனை அழகாய்
இருந்திருக்கும்
பூமி?

இறைவா நீ இல்லை
என்பதில் உடன்பாடில்லை
எனக்கு

இருக்கிறாய் என்பதற்கு
சமன்பாடுமில்லை
எனக்கு !

முரண்பாடுகளின் மொத்த
உருவாய் தெரிகிறாய் நீ
எனக்கு?

-தமிழினியன்-

No comments:

Post a Comment