Wednesday, May 13, 2015

அம்மா !!

பனிக்குடமுடைத்துன்
உடல் கிழித்து
என்னுலகப்
பிரவேசத்துக்கு
உன்னை மறு
பிரசவமாக்கி

நீர்க்குடமுடைத்து
நான்
தனிவழி
போகும் வரை
கடந்து வந்த
உறவுகளில்
என்
கடன் தீரா
உறவம்மா நீ!!

வெயிலாடி
ஓய்ந்தொதுங்கும்
மரநிழலில்
உன் முந்தானை
நிழல் தந்த
சுகமில்லை!

அம்மா!!

அயர்ந்தசந்து
தலை சாய்க்கும்
தலையணையில்
நீ தலைதடவி
தந்த மடி
சுகமில்லை!

பசியாற
என்னவளிடும்
அன்னத்தில்
நீ பிசைந்தூடிய
சாதத்தின்
சுவையில்லை!

அம்மா!

என்பிள்ளை
பெற்றெடுக்க
என்னவள்
பட்ட பாட்டை
அருகிருந்து
பார்த்த பின் தான்
நீ என்னைப்
பெற்றெடுக்க
பெற்ற துன்பம்
கற்றறிந்தேன்!

பொறுத்தருள்
தாயே!
என்னைப்
பொறுத்தருள்!

பொறுக்கா
வலி கொடுத்து
பூமிக்கு
நான் வரவுன்
பூவுடல்
கிழித்து விட்டேன்!

பொறுத்தருள்
தாயே !
என்னைப்
பொறுத்தருள்

ஒருமுறை
ஒரேயொருமுறை
மறுபடி நீ
வரமாட்டாயா!?

உன் பூமுகம்
சாய்த்தென் மடியில்
தலை தடவி
நீ தந்த சுகம்
தந்துன்னை
தூங்க வைத்து
என்
கடன் கொஞ்சம்
கழிப்பதற்கு

ஒருமுறை
ஒரேயொருமுறை
மறுபடி நீ
வரமாட்டாயா!?

அம்மா!

-தமிழினியன்-

No comments:

Post a Comment