Friday, May 8, 2015

தாய்மடி நீ!


நிஜம்  மறைத்த நிழலெல்லாம் அழகில்லை!
நிலா! நீ காட்டும் நிழல் மட்டும் அழகோ அழகு!

பார்த்தாலும் சுவைத்தாலும் திகட்டாத பால் நீ!
இரவுக் காத்தாடி உனைச்சாய சலிக்காத தோள் நீ!

முதல் மனிதன் முதற்கொண்டு
பெண்டாண்டும் பத்தினி நீ!

நாம்இன்று வரை உனைத் தூக்கி
கொண்டாடும் உத்தமி நீ!

பாவலர் பாக்களிலே பாபொருள் ஆனவள் நீ!
உனைப் பாடாத பாவலர் யார் பாரினிலே சொல்லடி நீ !

பாவையர் பூமுகமுன் பால்நிறம் போன்றதென்று
பாடிய பாடலுக்குள் வீழாத பெண்ணவள் யார்?

திங்களொரு நாளில் தீட்டாகி நீயொதுங்க
பங்கமாய் விசும்பிருண்டு மூளியாகிப் போகிறது!

பங்கமென்று உன்னுடலில் அங்கமெதுவுமில்லையே!
எங்கெதனை சென்றுநீ சீர்செய்ய  மறைகிறாய்?

ஆதிமுதல் காதலுக்கு தூது போன தோழியடி! நீ
ஜாதி மத பேதமின்றி நம்சோகங்களின் தூளியடி!

தனிமை கொண்டு தவிப்போரின் தாசியடி -அவர்
தனிமை கொன்று தாலாட்டும் தாய்மடி நீ!

-தமிழினியன்-

No comments:

Post a Comment