Saturday, May 2, 2015

சாணக்கியன்!


இருண்ட மேககங்கள் திரண்டிருநந்த வானமாய் இவள் முகம் கறுத்திருந்ததை வீட்டினுள் நுழையும் போதே கண்டு;இன்று நிச்சயம் ஒரு இடி முழக்கம் வீட்டை இரண்டு படுத்தப் போகிறது என்பதைக் கணித்து விட்டேன்.
மௌனமாகச் சென்று முகம் கை கால் அலம்பி லுங்கியினுள் என்னை நுழைத்துக் கொண்டு வந்து கால்களை நீட்டி அமர்ந்து டீ.வி பார்கத் தொடங்கினேன்.கண்கள் டீ.வியிலும் கவனம் முழுக்க இன்று என்ன இடி இடிக்கப் போகிறது என்பதிலும்,அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதிலும் ஓடியது.எதிரியின் தாக்குதல் எந்தத் திசையில் இருந்து எதனால் நடக்கும் என்று தெரியாத படை வீரனாய் மனதுக்குள் டென்ஷன் என்னைப் பாடாய்ப் படுத்தியது.

எனக்கென்று பக்கத்து முக்காலியில் வந்தமர்ந்தது தேநீர்க் கோப்பை. அதில் பறந்த ஆவி அதன் சூட்டையும் வைத்தவளின் சூட்டையும் சொல்லாமல் சொல்லியது.கடவுளே! முடிந்தால்,உனக்குச் சித்தமிருந்தால் இன்றைய யுத்தத்தினை ஒத்தி போடப்பண்ணு என்ற வேண்டுதலுடன் தேநீரை எடுத்துவாயில் வைத்தேன்.வைத்த வேகத்தில் "ஸ்ஆஆ"என்று உதறிக் கொண்டேன்.சுரீரென்று வந்தகோபத்தினையும் கப்பென்று அடக்கிக்கொண்டேன்.எங்கே!?நான்கத்த அதுவே யுத்தத்தின் ஆரம்பப் புள்ளியாகி விடுமோ!? என்ற முன்னெச்சரிக்கையுடன் ஊதி ஊதி தேநீரைக் குடித்து முடித்தேன்.மனதுக்குள் ஒரு சாணக்கியன் வேலை செய்ய ஆரம்பித்தான்.என்னவென்று தெரியாத யுத்தத்துக்கு வியூகம் வகுப்தையும் விட அந்த யுத்த மேகத்தையே கலைத்து விட்டால்!?ஆம் அது தான் சரி என்ற முடிவுடன் சமையலறைக்குள் சென்றேன்.குடித்த தேநீர்க் கோப்பையை கழுவிக் கொழுவிய படியே என்னவளை நோட்டம் விட்டேன்.

அடுப்பில் எதையோ வைத்து எரியும் அடுப்புடன் போட்டி போட்டு எரிவதைப் போல் நின்று கொண்டிருந்தாள்.என்னை ஏனென்றும் ஏறெடுத்தும் பார்க்காமல் அவள் நின்றது என்னுள் ஒரு ஈகோவைத் தூண்டியது.உடனே அதைத் தூக்கி எறிந்து விட்டு மெதுவாக அவள் பின்புறமாகச் சென்று அவளைக் கட்டியணைத்து பிடறியும் கழுத்தும் காதும் சந்திக்கும் அந்தப் புள்ளியல் என் முகத்தைப் புதைத்தேன்.ஆஹா எரிமலையொன்று எவரெஸ்ட் பனிமலையாய் குளிர்ந்து சிலிர்த்தது போல் சிணுங்கினாள்.

அந்தச் சிணுங்களும் சிலிர்ப்பும் அடங்க முன் அவளைத் திருப்பி என் அதரங்களை அவள் அதரங்களில் ஒற்றி எடுத்து விட்டு வெற்றி வீரனாய் நிமிர்ந்த நடையுடன் வந்து டீ.வியின் முன் அமர்ந்தேன்.

வெடகமும் சிலிர்ப்பும் அடங்கி குளிர்ந்த பனி மலையில் பூத்த பூவாய் வெளியே வந்தாள்."இஞ்சேப்பா நீங்க அன்றைக்கு எனக்கு வாங்கின மூக்குத்திய ஏன் முதல்ல மாமிட்ட காட்டினீங்க?

ஓஹோ இங்கு தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது புலனாக "ஏனம்மா அப்படிக் கேட்கிறீங்க?"என்றேன்.

"இல்லை இன்றைக்கு மாமி வந்தவ.நீங்க மூக்குத்திய அவட்ட காட்டினத பற்றிச் சொன்னா.நீங்க எனக்கு வாங்கினத யாரிட்டயும் காட்டாம என்னட்ட தந்திருந்தா இது நீங்க வாங்கித் தந்தது என்று சொல்லிப் பெருமைப்பட்டிருப்பன் தானே!?ஆனாலும் நீங்க சரியான மோசம்!"என்று செல்லக் கோபத்துடன் தன் ஆதங்கத்தை சொல்லி விட்டுப் போனாள்.
அப்பாடா இது தான் பிரச்சனையா!?
ஆனாலும் இந்தப் பெண்களை புரிந்து கொள்ள முடியவில்லையே! என்ற ஏக்கத்துடன் ஒரு வழியாக ஒரு முத்தத்துடன் சத்தமின்றி யுத்தமின்றி நிலைமையை சிக்கெடுத்த என் சாணக்கியத்தை நானே மெச்சிக் கொண்டேன்.

-தமிழினியன்-

No comments:

Post a Comment